வவுனியா பொது வைத்தியசாலையால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து இரண்டாவது விடுதியும் கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பொது வைத்தியசாலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் முதலாவது கொரோனா தொற்றாளர் விடுதி அண்மையில் நோயாளர்களால் நிரம்பியமையால் இரண்டாவது நோயாளர் விடுதியும் கொரோனா நோயாளர்களுக்காக திறக்கப்பட்டது.

தற்போது அந்த விடுதியும் நிரம்பியுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சை பிரிவிலும், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஒட்சிசன் தேவையுடையோராகவும் காணப்படுகின்றனர்.
மேலும், நால்வர் கொரோனா தொற்றினால் கடந்த ஓரிரு நாட்களில் மரணமடைந்துள்ளனர்.

நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படகூடிய தருணத்தில் வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரித்து வருகின்றனர்.

இந் நிலையில் நாட்டில் கொரோனா மரணங்களும் கொரோனா தொற்றாளர்களும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும், வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார உத்தியோகத்தர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாவதால் வைத்தியசாலை “நிர்வாக இரட்டை கடின நிலையை” ( Double burden of Administration) எதிர் நோக்கியுள்ளது. கடும் மனித வலு பிரச்சினையையும் சந்தித்துள்ளது.

இவ்வாறான சூழலில் மக்கள் தம்மை தாமே பாதுகாத்து கொள்வதுடன் வவுனியா மாவட்டத்தில் நோயாளர் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *