வைத்தியசாலை விடுதிகள் நிரம்பியுள்ளன; கொரோனா சடலங்களை தகனம் செய்வதிலும் சிக்கல் – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன நிரம்பியுள்ளதுடன், கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறீபவானந்தராஜா அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (13) யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன நோயாளர்களால் நிரம்பியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், குறைந்தளவான வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பங்களிப்புடனே நாளாந்த சேவைகளை முன்னெடுத்து வருகிறோம்.

கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் 430 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ள நிலையில், அதனை பூர்த்தி செய்வதற்காக தினமும் கொழும்பிற்கு வைத்தியசாலை வாகனங்கள் அனுப்பப்பட்டு ஒட்சிசன் சிலிண்டர்கள் பெறப்படுகின்றன.

யாழில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும் தற்போது சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாழில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை யாழ். கோம்பையன் இந்து மயானத்தில் மாத்திரமே மின்தகனம் செய்யமுடியும்.

அதுவும் நாளொன்றில் 4 சடலங்களை மாத்திரமே மின்தகனம் செய்ய முடியும்.

அதனால் பல சடலங்கள் தகனம் செய்யப்பட்டாது வைத்தியசாலையில் தேங்கி இருக்கின்றன.

இவற்றை கருத்திற்கொண்டு யாழ். மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *