மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எம்.எம்.ஹிர்பஹான்

மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எம்.எம்.ஹிர்பஹான் கடமையேற்றார்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை கமு/ஷம்ஸ் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இக்கல்லூரியின் பழைய மாணவரும், பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபருமான எம்.எம்.ஹிர்பஹான் (இலங்கை அதிபர் சேவை தரம்-1) இன்று முதல் (13.08.2021) பாடசாலையின் அதிபர் பொறுப்பை கடமையேற்றார். பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய ஏ.எல்.சக்காப் ஓய்வு பெற்றுச் செல்வதை அடுத்து, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலையின் புதிய அதிபரிடத்தில்  கடமை பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (12) பாடசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதியுமான ரி.எல்.அப்துல் மனாப், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.எம்.முஸர்ரப் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
புதிய அதிபர் எம்.எம்.ஹிர்பஹான், கல்வித்துறையிலும், கணினித்துறையிலும் பல பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்துள்ளார். மருதமுனை அல் – மனார் மத்திய கல்லூரியில் மூன்று வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைமானி பட்டப்படிப்பினை 1994 ஆம் ஆண்டு பூர்த்திசெய்த இவர் 1994.10.03 ஆம் திகதி பட்டதாரி ஆசிரியராக அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் முதல் நியமனம் பெற்றார். பின்னர் 1995-10-04ஆம் திகதி ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலத்திற்கு இடமாற்றம் பெற்று கடமையாற்றியதுடன், 1997.01.10 ஆம் திகதி மருதமுனை அல் – மனார் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார்.2004 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கன்னங்கரா விருதைப் பெற்றுக்கொண்ட இவர் முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக கடமையாற்றி வருவதுடன், அகவிழி எனும் கல்வி சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதிவருகின்றார்.
1997 ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் சிறப்புச் சித்தியும், 2000 ஆம் ஆண்டில் கணினி விஞ்ஞான டிப்ளோமாவில் சிறப்புச் சித்தியையும், 2009 ஆம் ஆண்டில் கல்வி முதுமாணிக் கற்கை நெறியையும் 2020 ஆம் ஆண்டில் பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறியையும் பூர்த்திசெய்து தனது உயர் கல்வித் தகைமைகளை அதிகரித்துக்கொண்டார்.

அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த இவர் 20210.02.10 திகதி முதல் (SLPS-11) சேவையில் உள்ளீர்கப்பட்டார்.   2014.01.06 ஆம் திகதி மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரியின் அதிபர் பொறுப்பேற்று, அதன் கல்வி மற்றும் பௌதீக வள அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.

2016.02.10 திகதி அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வும் பெற்றுக்கொண்ட இவர் அல்மனார் மத்திய கல்லூரியிலிருந்து எதிர்பாராத விதமாக பல நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கல்விப்புலத்தில் மிகச் சிறந்த ஆளுமை மிக்கவராக திகழ்ந்த இவர் இப்பாடசாலையிலிருந்து வெளியேறினார்.
இன்னிலையில் தான் கல்விகற்ற மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 2016.08.13 ஆம் திகதி முதல் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார். பெரும் மனம் கொண்டு இதனை ஏற்றுக்கொண்ட இவர் தற்போது, இங்கு அதிபராகக் கடமையாற்றிய ஏ.எல்.சக்காப் 2021.08.13 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்வதால் அக்கல்லூரியின் புதிய அதிபர் பொறுப்பை எம்.எம்.ஹிர்பஹான் ஏற்றுக்கொண்டு அதிபர் ஆசனத்தில் அமர்ந்தார். இதன் மூலம் மருதமுனை அல்- மனார் மற்றும் ஷம்ஸ் தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளுக்கும் அதிபராக சேவையாற்றியவர் என்ற பெருமைக்குரியவராகவும் மாறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *