ஹிசாலினியின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் எரிகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஜூட்குமார் ஹிசாலினியின் சடலம் 12 நாட்களுக்கு பின் இன்று இரண்டாவது தடவையாகவும் சடலம் டயகம மூன்றாம் பிரிவிலுள்ள பொது மயானத்தில் மீண்டும் அதே இடத்தில் இன்று (13) புதைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய இரண்டாவது வைத்திய பரிசோதனைக்காக கடந்த 30ம் திகதி குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டு குறித்த சடலம் பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் பேராதனைக்கு வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

விசேட வைத்திய குழுவின் பரிசோதனை நிறைவு பெற்றதனை தொடர்ந்து இன்று அவரது தாய் மற்றும் சகோதரன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டதனை தொடர்ந்தே மீண்டும் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டது.

Advertisement

சுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிசாலினியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சடலம் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைவாக பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து வருகைத்தந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹன்ஷா அபேவர்த்தன கடந்த மாதம் (29) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிறுமி ஹிசாலினியின் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றினை சமர்பித்ததையடுத்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதின் வீட்டில் பணி புரிந்த டயகம தோட்டத்தை சேர்ந்த ஜுட்குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 03 ம் திகதி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி மிகவும் மர்மான முறையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் டயகம தோட்ட மயானத்தில் கடந்த 16 ம் திகதி அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஹிசாலினியின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் தோன்றியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கோரி போராட்டங்கள் இடம்பெற்று வந்தன..

சிறுமியின் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதெனவும் புதைக்கப்பட்ட மகளின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்றினையும் சமர்ப்பித்திருந்தார்..

இந்நிலையில் கொழும்பு நீதிமன்றம் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

குறித்த உத்தரவுக்கமைய சடலம் தொண்டி எடுக்கப்பட்ட பின் பெற்றோர் சடலத்தினை உறுதிபடுத்தியதை தொடர்ந்து சடலம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *