வேலணையில் உருவாகவுள்ள இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (14) மாலை 4 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் குணாளன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலணையில் இறால் பண்ணையொன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த இடத்திற்கு அருகில் நண்டுகள் உற்பத்தி செய்யும் (தம்பாட்டி) இடமொன்றும் காணப்படுகிறது.
குறித்த நண்டுகளுக்கு சந்தைகளில் பெரும் கேள்வி நிலவுகிறது.
இந்நிலையில் அதற்கருகில் இறால் பண்ணையொன்று உருவாகுமானால் நண்டு உற்பத்திகள் பாதிப்படையும்.
இறால் பண்ணை உருவாகவுள்ள குறித்த இடம், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலமாக பயன்படுத்த உகந்தது என பொறியிலாளர் சர்வேஸ்வரன் தெளிவுபடுத்தியிருந்தார்.
குறித்த கருத்ததை கடந்த காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஏற்றுக் கொண்டிருந்தார்.
இவ்விடத்திற்கு அண்மைய காலமாக சுற்றறுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இவ்விடத்தில் இறால் பண்ணைகள் அமையுமானால் சுற்றுச்சூழலில் துர்நாற்றம் ஏற்படும்.
இது சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
5, 6 பேருக்கு தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதற்காக சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (14) மாலை 4 மணியளவில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.