நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்தார்
இன்று ஆரம்பமாகியுள்ள நல்லூர் உற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 25 நாட்கள் நடைபெறவுள்ளது
Advertisement
தற்போது நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது. தற்போதுள்ள கொரோனா தீவிர நிலையில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடாத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன
அந்த சுற்றி நிரூபங்களுக்கு அமைவாக யாழ்ப்பாண மாநகரசபை, ஆலய நிர்வாகம் மற்றும் பொலிஸார் இணைந்து ஆலய உற்சவத்தினை பாதுகாப்பான முறையில் எவ்வாறு நடாத்துவது தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம்.
அந்த முடிவின் பிரகாரம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்தினரால் அடையாள அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் வேறு எவரும் ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எனவே பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு ஆலயத்துக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள். வீடுகளில் இருந்தவாறு நேரடியாக ஒளிபரப்பப்படும் ஆலய உற்சவத்தை தரிசிப்பதன் மூலம் தொற்று நிலைமையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தற்போது நாட்டில் கொரோனா பரவல் நிலைமை தீவிரமாக காணப்படுகின்றது. அந்த நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
எனவே பொதுமக்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்து வீடுகளிலிருந்து நல்லூர் ஆலய உற்சவத்தினை தரிசியுங்கள் என்றார்.