இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையில் தம்மை பாதுகாத்துக் கொள்ள அனைத்து மக்களும் சுய பயண கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டு மக்கள் அனைவரும் சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கையில்,
பொதுமக்கள் தமக்கு தாமே பயணக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, நாட்டிலிருந்து கொரோனா வைரஸை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இனி அரசாங்கத்திடம் கோர போவதில்லை.
நாளொன்றில் மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 150 இற்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலைமை, எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் (13) அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகள் எதையும் அமுல்படுத்தவில்லை.
அவ்வாறான தீர்மானங்களை எடுக்குமாறு இனி நாம் அரசாங்கத்திடம் கோரப் போவதில்லை.
நாட்டு மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


