
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இன்று (16) முதல் பல விடயங்கள் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று முதல் கூட்டங்கள், நிகழ்வுகள், திருமணங்கள் போன்றவற்றை நடத்த முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், திருமணத்தை பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்றும், வீட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மணமகனும், மணமகளும், இரு தரப்பினரின் பெற்றோரும், பதிவாளரும், இரண்டு சாட்சிகளும் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். அதைத் தவிர, வேறு யாருக்கும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இன்று (16) இரவு 10 மணி முதல் நாளை (17) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு அமுலில் இருக்கும். இந்த காலகட்டத்தில், அத்தியாவசிய சேவையாளர்கள், மற்றும் அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நெருங்கிய உறவினரின் இறுதிச்சடங்கு அல்லது சிகிச்சையின் போது மட்டுமே மாகாண எல்லைகளை கடக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முகக்கவசம் அணியாத நபர்களை கைது செய்வதற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

