வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் நுழைந்த இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (2021.08.15) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இராணுவ வாகனத்தில் இராணுவச் சீருடையணிந்து ஆயுதங்களுடன் வந்த10 இற்கு மேற்பட்டவர்கள் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தியதுடன் அவர்கள் மேல்
கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தம்மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கிராம மக்கள் அங்குள்ள பிரதேச சபை உறுப்பினருக்கு தெரியப்படுத்திய போது பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசா சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அவர் இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில், கிராமமே மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியிருந்தது. படைச் சீருடை அணிந்திருந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள் நின்றனர். அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர்.
அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய நான் மக்களைத் தாக்கியமை தொடர்பில் கேள்வியெழுப்பினேன். நான் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் என்னுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தேன். இதையடுத்து படைச் சீருடை அணிந்தவர்கள் ஓடித்தப்பினர்.
12 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை, பொலிசாருக்கு தெரிவிப்பதற்கு 119 க்கு அழைப்பை ஏற்படுத்தினோம். தாக்குதல் நடத்தியவர்கள் ஓடித்தப்பிய பின்னரே – 2 மணியளவில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் பொன்னாலை மாட்டுவண்டித் திடலில் கொவிட் தொற்றையும் பொருட்படுத்தாமல் அராலியில் இருந்து வந்தவர்களால் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி நடத்தப்பட்டது. இதன்போது. இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கைகலப்பு ஏற்பட்டது. இதில் 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகினறது. இதன் தொடர்ச்சியாவே படையினரின் தாக்குதல் இடம்பெற்றதாக மக்கள் குற்றம் சாட்டுவதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் அச்சத்தில் இருந்த காரணத்தினால் முறைப்பாடு செய்யச் செல்லவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸார் அப்பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை தமது பாதுகாப்புடன் அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


