நல்லூர் ஆலய வளாகத்தினுள் செல்ல சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வீதித்தடைகளுக்கு உள்ளே உள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மக்களே சுகாதார நடைமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் விசேட பூஜை நேரங்களான அதிகாலை 04.00 – 05.30, காலை 10.00 – 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் மற்றும் விசேட திருவிழா நாட்களிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதார நிலைமையின் அடிப்படையில் குறித்த நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்தின் நான்கு பக்க வீதிகளிலும் ஆலயத்தை அண்டியுள்ள இரண்டாவது தடைகளை தளர்த்தி விடுவிக்குமாறு யாழ். மாநகர சபை பிரதி முதல்வரால், யாழ். மாநகர சபை முதல்வருக்கு கோரிக்கை கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்காக சகல வீதிகளிலும் இரு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு பக்தர்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற சூழலின் பின்பும் வீதித்தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் ஆலய சூழலில் வசிக்கும் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனை கருத்திற்கொண்டு ஆலயத்தின் நான்கு பக்க வீதிகளிலும் ஆலயத்தை அண்டியுள்ள இரண்டாவது தடைகளை தளர்த்தி விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


