கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நீண்ட காலமாக வாழ்ந்து வந்த சுமார் 15 நாய்கள், விஷம் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அதன் நிறைவேற்று அதிகாரி சுனில் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று கறுவாத்தோட்டம் காவல்துறையில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.
அத்தோடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பிரதானி ஒருவரினால், 140,000 ரூபா உடன்படிக்கையின் அடிப்படையில், குறித்த நாய்கள் விஷம் ஏற்றி கொல்லப்பட்டதாக அந்த சங்கத்தினர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
மேலும் விலங்குகள் உரிமை பாதுகாப்பு குழுக்களினால் அந்த நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான நிலையில், குறித்த நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் நிறைவேற்று அதிகாரி சுனில் திஸாநாயக்க அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு பிரவேசிப்பவர்களுக்கு குறித்த நாய்கள் பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாக அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


