இணக்கப்பாட்டுக்கு வந்த பொன்னாலை அமைதியின்மை விவகாரம்!

யாழ்ப்பாணம் வலி மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கிடையே சில நாட்களாக இடம்பெற்று வந்த அமைதியின்மை தொடர்பில் இன்றைய தினம் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறித்த அமைதியின்மை தொடர்பில் தீர்வொன்றை பெறுவதற்காக, வலிமேற்கு பிரதேச சபை செயலாளர், பொன்னாலை மற்றும் கோட்டைக்காடு பகுதி பிரதிநிதிகள் , கிராம சேவகர், பிரதேச சபை தவிசாளர், பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இன்று கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபை செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.பொன்னாலை சவாரித்திடலில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியை தொடர்ந்து அப்பகுதியில் சில நாட்களாக பதற்றநிலை காணப்பட்டது.

இதனை தொடர்ந்து, கோட்டைக்காடு பகுதி இளைஞர்கள் தம்மை வாள்,கத்தி கொண்டு வந்து அச்சுறுத்துவதாக பொன்னாலை மக்கள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், அண்மையில் இராணுவத்தினர் வீடு புகுந்து மக்களை தாக்கி அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இச் சம்பவம் குறித்து இராணுவ அதிகாரியிடம் வினவியபோது, ”தாம் பொது மக்களை முகக்கவசம் அணியுமாறும், கொரோனா தொற்று சூழலில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி காணப்பட்ட நிலையிலேயே அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கூறியதாகவும்” தெரிவித்தார்.

ஆனால் பொது மக்கள் மீது தங்கள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தின் அடிப்படையில் அன்றைய தினம் இராணுவத்தினர் சென்று இருக்காவிட்டால் மக்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கும் என உணர முடிகிறது.

இன்றைய கலந்துரையாடலின் முடிவில், இரு தரப்பினரும் தங்கள் சமாதானத்திற்கு இணக்கம் தெரிவித்ததுடன் , இனி வரும் காலங்களில் மாட்டுவண்டி சவாரி நடாத்துவதாயின் அனுமதிப் பத்திரத்தை பெறுமாறு தெரிவித்துள்ளோம் என மேலும் தெரிவித்தார் .

Leave a Reply