பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்கின்ற துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டில் பொதுமுடக்கத்தை அரசாங்கம் அறிவித்தால் சிறந்தது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொரோனா நிலவரம் மோசமடைந்துள்ள நிலையில், நாட்டை முடக்கும்படி கோரிவருகின்ற எதிர்கட்சிகள், அதற்கான மாற்று யோசனைகளை முன்வைப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்விடயத்தை இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்று மேலும் பரவாமலிருப்பதற்காக பொதுமுடக்கத்தை அறிவிக்கும்படி பலரும் கோரிவருகின்ற நிலையில், இதுகுறித்து ஆளுங்கட்சியின் பிரதான உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ வித்தியாசமான பதிலை வழங்கினார்.
நாட்டை மூடும்படி எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதற்கு நாங்களும் தயார். இருப்பினும் நாட்டை மூடுகின்றபோது பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்கின்ற அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் நடத்திச்செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
விவசாயம், மீன்பிடித்துறைகளுக்கு தொடர்புடைய பிரிவுகளை மூடமுடியுமா? ஏற்றுமதித்துறையில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களையும் மூடமுடியுமா? இல்லை. இப்படியிருக்கையில் நாட்டை மூடும்படி எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றார்களே தவிர மாற்று யோசனைகளை முன்வைப்பதில்லை.
தற்போது தேர்தல்கள் இல்லை. எனினும் தங்களது மாற்று யோசனைகளை மக்கள் முன்பாக எதிர்கட்சித்தலைவரும், எதிர்கட்சியினரும் முன்வைக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கான நலன்புரி, அபிவிருத்தி்த் திட்டங்கள், தடுப்பூசித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான மாற்றுவழியை அறிவிக்காமல் நளின் பண்டார போன்ற முட்டாள்கள் வந்து ஏதோ ஒன்றை கூறுகின்றார்.
சுனாமி, யுத்தம் உள்ளிட்ட எந்த அழிவுகளும் இல்லாத நாடாக இந்த நாட்டை நல்லாட்சிக்கு கையளித்தோம். அவற்றை சரிவர நிர்வகிக்க முடியாமவர்கள் இன்று இவ்வாறு பேசுகின்றனர். ஆகவே தற்போதைய நிலைமையானது மிகவும் தீர்க்கமானது. தெரிந்தவர்களது உயிரும் இழக்கப்படுகின்றது-என தெரிவித்தனர்.


