இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக, ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரரான நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு முட்டுக்கட்டை இடும் வகையிலான யோசனையொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ளது.
அத்துடன், பஸில் ராஜபக்சவை இலக்குவைத்தே இந்த யோசனையை முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அணியினர் முன்வைத்திருப்பதாகவே விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்பாக இணையவழி ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல யோசனைகளை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு டாலி வீதியிலுள்ள சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்காமல் தற்போதுள்ள முறைமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதவிர, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். இரட்டைக் குடியுரிமையை வைத்திருப்போர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கின்ற சட்டதிட்டங்கள நீக்க வேண்டும் என்ற யோசனையை பரிந்துரைத்துள்ளோம்.
மேலும் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் சில மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படுதலில் உள்ள நெருக்கடியை தீர்க்க, ஜனாதிபதி முறைமை அல்லது வெஸ்ட்மினிஸ்டர் முறைமை அறிவிக்கப்பட வேண்டும்.
ஆகவே நிறைவேற்றதிகார முறையை தக்கவைத்துக் கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் முறையையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கலப்பு முறையை வலியுறுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பஸில் ராஜபக்ச போட்டியிட எதிர்பார்க்கின்ற நிலையில், அவர் தற்போதும் ஸ்ரீலங்கா மற்றும் அமெரிக்காவின் குடியுரிமையை வைத்திருப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


