அரசியல் கட்சிகள், சுகாதாரத் துறை மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் வேண்டுகோளின் பேரில், அடுத்த சில வாரங்களில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அடுத்த சில வாரங்களில் நாட்டை முழுமையாக மூடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும், இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தலைமையில், கொவிட்-19 செயலணி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும்.
அந்த வகையில், நாளையும் குறித்த செயலணி கூடவுள்ளது.
அத்துடன், சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமையவே, அடுத்தக்கட்டத் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.
இந்நிலையில், தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்குமாறு பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்றையதினம் கோரியிருந்தது.
இதேவேளை, ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிகட்சிகளில் பத்து கட்சிகள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


