சில ஆசிரியர்கள் கேவலமாக செயற்படுகின்றனர்- இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு உள்ளிட்ட விடயங்களுக்கான தீர்வை நோக்கி ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது அதன் தரத்தைக் குறைத்து மதிப்பிடும் கேவலமான செயல்களில் ஆசிரியர்கள் சிலர் செயல்படுவது கவலையளிப்பதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா விடுத்துள்ள விஷேட அறிக்கையில்

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகளில் நாட்டின் நிலைமை கருதி எல்லாச் சங்கப் பிரதிநிதிகளும் இணையாது விட்டாலும் சங்கத்தின் ஏனைய உச்ச பீடத்திலுள்ளவர்களின் பரவலாக்கல்களுடன் பிராந்திய ரீதியான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ் ஒன்றிணைவின் காரணமாகவே கடந்த காலங்களை விட எமது போராட்டங்கள் கவனயீர்ப்பைப் பெற்றதாக மாறியுள்ளது.

நமது போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாகவே மேற்கொண்டு வருகின்றோம். இணைய வழிக் கல்வியிலிருந்து எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தவிர்ந்திருப்பது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.

இதனை விளங்கிக் கொள்ளாத சில வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அதிபர்களும் ஆசிரியர்களை முறைகேடாகப் பயன்படுத்த இன்றுவரை எத்தனித்துக் கொண்டிருக்கின்றனர். தொழிற்சங்க கூட்டிணைவுகளின் சக்தியினையும் எல்லையினையும் விளங்கிய ஆசிரியர்களுக்கு இவைகளை எதிர்க்கும், சுட்டிக் காட்டும் திறன் இல்லையென்றால் தங்களை விடக் கோழைகள் யார்தான் இருக்க முடியும்.

பெருமளவான அதிபர்கள் எமது போராட்டத்தில் கைகோர்த்து நேரடியாகக் களத்தில் இருக்கும் போது சில அதிபர்கள் இணைய வகுப்புக்களை நடத்துவதில் காட்டும் ஆர்வம் குறித்து மனவருத்தப்படாமல் இருக்க முடியாது. இணைய வழி நிறுத்தமே நமது பிரதான ஆயுதங்களில் ஒன்றாக இருக்கும் போது அதனையே பாடசாலைகளில் விளம்பரப்படுத்தி நடத்துகின்ற ஆசிரியர் சமூகம் இதன் மூலம் சொல்ல வரும் செய்தி எனன? நாடு முழுவதும் ஒரு கல்வி நாட்காட்டி இருக்கும் போது , அது முடக்கப்பட்டிருக்கும் போது உங்களது மாணவர்களுக்கு மாத்திரம் கற்பித்து என்ன பிரயோசனம் அடையப் போகிறீர்கள்?

ஆசிரியர்களால் சமூக ஊடகங்களில் இடப்படும் இணைய வகுப்புக்களின் விபரங்களைப் பார்த்து பெற்றோர்களே கேள்வி கேட்கும் அளவிற்கு நிலை மாறியிருக்கிறதே? இது பற்றிய சிந்தனை தங்களுக்கு ஏற்படாமல் இருப்பது ஆசிரியர் சமூகத்திற்கே வெட்கக் கேடு என்பதனை நீங்கள் உணராமல் இருப்பது அதிசயமானது.

சட்ட ஏற்பாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பேது பாடசாலை அல்லது அலுவலகக் கட்டமைப்பினால் ஏதும் செய்து விடுவார்கள் என அஞ்சுகிறீர்களா? சொற்ப அளவிலான சுகாதாரத் துறையினர் நின்று கொண்டே வைத்தியசாலைகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களில் பங்கெடுப்பதனை நீங்கள் காணவில்லை. நாளைய சம்பள ஏற்றத்தினையும் அதன் பின்னால் உள்ள நன்மைகளையும் நீங்கள்தானே அடையப் போகிறீர்கள்?

கிழக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளும் அப்பாடசாலைகளில் உள்ள சில ஆசிரியர்களும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு எதிரான இவ்வாறான முன்னெடுப்புக்களில் தொடராக ஈடுபட்டு வருவதாக சுட்டிக் காட்டப்படுவதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

நமது போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் ஆசிரியர்களின் செயற்பாடுகளைக் கேள்விக் குறியாக்காமல் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் போராட்ட இலக்குகளை அடையும் வரை அமைதி காக்குமாறு குறிப்பிட்ட ஆசிரியர்களையும் அதிபர்களையும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொள்வதாக மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *