இலங்கையில் கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், சுகாதார நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருமண நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொகவந்தலாவ – ஆரியபுர பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில், சுகாதார விதிமுறைகளை மீறி, இடம்பெறவிருந்த திருமண நிகழ்வொன்று, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால், இன்று வெள்ளிக்கிழமை (20) காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில், சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் 25கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த திருமண மண்டபத்தில் கூடியிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.
எனினும் , மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் மாத்திரம் திருமணத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, குறித்த திருமண மண்டபத்தின் உரிமையாளரும் பொலிஸ்
நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


