மன்னாரில் டெல்டா தாக்கம்- வைத்தியர் ரி.வினோதன் கூறுவது என்ன?

மன்னார் மாவட்டத்திலும் ‘டெல்டா’ தொற்று தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மக்கள் தற்போது சுகாதார வழி முறைகளை கடைபிடிப்பதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இதனையும் விட கூடுதலான அளவில் மிக கடுமையாக சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து தற்போது நாடு முழுவதும் பரவுகின்ற ‘டெல்டா’ தொற்று மன்னார் மாவட்டத்திலும் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (19) மாலை வரை கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி 59 ஆயிரத்து 126 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.இவர்களில் 1300 பேர் கர்ப்பிணிகளாக உள்ளனர்.

இதேவேளை 2 ஆவது தடுப்பூசி நேற்று வியாழக்கிழமை (19) மாலை வரை 47 ஆயிரத்து 406 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் தற்போது வரை 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவே ஒரு மாதத்தில் இது வரை மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அதிகூடிய எண்ணிக்கையுடைய நோயாளிகளின் தொகையாகும்.

புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்புடைய 1016 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1368 பேரும்,இவ்வருடம் மாத்திரம் 1351 பேரும் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் மொத்தம் 1500 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தோடு மொத்தம் 27 ஆயிரத்து 400 வரையிலான பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 0.86 விதமாக காணப்படும் மரண வீதம் உயர்வடைந்து தற்போது 0.96 வீதமாக காணப்படுகின்றது.

நாட்டில் இடம் பெற்று வரும் கொரோனா மரண வீதத்துடன் ஒப்பிடும் போது குறைவாக காணப்பட்டாலும்,எமது மரண வீதம் அதிகரித்து செல்வதை காட்டுகிறது.

எனவே மக்கள் மிகவும் அவதானத்துடன்,சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் வீடுகளில் தனித் திருக்காமல் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கப்படுவதினால் பொது மக்கள் எவ்வித அச்சமும் இன்றி நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி, அல்லது பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்து தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மன்னார் மாவட்ட மக்கள் தற்போது சுகாதார வழி முறைகளை கடைபிடிப்பதில் முன்னேற்றம் காணப்பட்டாலும்,இதனையும் விட கூடுதலான அளவில் மிக கடுமையாக சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து தற்போது நாடு முழுவதும் பரவுகின்ற ‘டெல்டா தொற்று’ மன்னார் மாவட்டத்திலும் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *