
சின்ன கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பால் நடிகர் விவேக் காலமானார்.
இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இறப்பதற்கு முன்பு பல படங்களில் பிசியாக நடித்து வந்த விவேக், லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
துணிக்கடை, நகைக் கடை என சரவணா ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமான சரவணன் அருள், தனது கடை சம்பந்தமான விளம்பரப் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் அஜித் மற்றும் விக்ரமை வைத்து ‘உல்லாசம்’ மற்றும் ஹர்ரர் திரைப்படமான ‘விசில்’ போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் சரவணன் அருள் சொந்த தயாரிப்பில் இந்தப்படம் துவங்கியது. பிரபு, விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மாடல் அழகி கீத்திகா திவாரி , சரவணன் அருளுக்கு ஜோடி என்று பட பூஜை போடப்பட்டது.
ஹாரிஷ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் திடீரென கீத்திகா திவாரிக்கு பதிலாக ஊர்வசி ரவுத்தேலா நாயகியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க ஆயத்தமாகி வருகின்றனர் படக்குழுவினர்.
இன்னமும் பெயரிப்படாத இந்தப்படத்தில் லெஜண்ட் சரவணாவின் நண்பராக படம் முழுக்க விவேக்கின் கதாபாத்திரம் இடம்பெறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது துவங்கவுள்ள படப்பிடிப்பில் விவேக் போலவே தோற்றமுள்ள நபரை நடிக்க வைத்து மார்பிங் மூலம் மீண்டும் நடிகர் விவேக்கை திரையில் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

