நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கடுமையான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் நாட்டின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது..
இந்நிலையில் யாழ் மாவட்டத்தின் அநேக பிரதேசங்கள் குறிப்பாக யாழ் நகரப்பகுதி உள்ளிட்ட இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி முடங்கிக் காணப்பட்டன. குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியிருந்தது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில அத்தியாவசிய சேவைகள், தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் யாழ் மாவட்டத்தின் வீதிகளில் செயற்படுவோரைக் கண்டறியும் வகையில் பொலிஸாரினால் இன்று சனிக்கிழமைமுதல் பிரதான வீதிகளில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிச் செயற்பட முற்பட்ட சிலர் பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது




