இலங்கை அரசு தலிபான்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தலிபான்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ளமையை தெரிவிப்பதில் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறும் தலிபான்களைக் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் நேற்று (21) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்,

இஸ்லாமியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் என்பதுடன், பாடசாலைகளுக்கும் செல்லலாம் என தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று நிறுவப்படும் என தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது.

தற்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும், சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

அன்றாட நிலைமைகளை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

சார்க் உறுப்பு நாடு என்ற வகையில், இது சம்பந்தமாக எந்தவிதமான பிராந்திய முயற்சிகளுக்கும் உதவுவதற்கு, இலங்கை தமது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதென வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *