
போர்க்குற்ற மீறல்களுக்கு சர்வதேச விசாரணை மூலமே தமிழருக்கு தீர்வுவேண்டும் யாழ்.மாநகர சபையில் தீ்மானம்!
“இலங்கையில் இடம்பெற்ற போரின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்படவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஈ.பி.டி.பி கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றபோது, விளம்பர பலகை விவகாரம் விவாதிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி ஏனைய விடயங்கள் விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அந்த விடயங்களை விவாதிக்க மேலதிக நாள் ஒதுக்கப்பட்டு நேற்று மாநகரசபை அமர்வு நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர் அணியான மணிவண்ணன் தரப்பை சேர்ந்த வி.பார்த்தீபன் குறித்த தீர்மானத்தை சபையில் முன்வைத்தார்.
“இலங்கையில் இடம்பெற்ற போரின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும். இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராகிணி முன்மொழிய, இதே கட்சியைச் சேர்ந்த வித்தியானந்தன் வழிமொழிந்தார். அதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

