பொது ஜன…

பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் கல்முனை நெற் ஊடக வலையமைப்புக்கு வழங்கிய விசேட பேட்டி.

தமிழரை முதல்வராக்க அரசு பின்னிக்காது  
பொது ஜன பெரமுன மட்டு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் கூறுகிறார்

* மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவேன்.

* கல்முனைப் பிரதேச செயலக விவகாரம் : யாரையும் பாதிக்காத வகையில்  தீர்வு.

01. ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக இருக்கின்ற நீங்கள், கிழக்கில் எத்தகைய அபிவிருத்தி பணிகளை  முன்னெடுக்கிறீர்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியை வளர்த்துள்ளோம். இன்று இக்கட்சி ஊடாக ஒரு அமைச்சரையும் உருவாக்க முடிந்துள்ளது. கட்சியிலும் கட்சி தலைமையிலும் உள்ள நம்பிக்கையினால் இக்கட்சியை மட்டக்களப்பில் வளர்க்க பாடுபட்டோம். மக்களும் கட்சியை ஏற்றுள்ளனர். கட்சிக்காக பாடுபட்டவன் என்ற அடிப்படையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஜனாதிபதி, பிரதமர், கட்சியின் ஸ்தாபகரும் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ ஆகியோர்
மட்டக்களப்புக்கு முடிந்த அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் அமைப்பாளர் என்ற ரீதியில் நான் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து செய்து தருகின்றார்கள். அமைச்சர்களும் கட்சியை வளர்க்க ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
மட்டக்களப்புக்கு தேவையான அபிவிருத்திகளை இனங்கண்டு மாவட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக் கேற்ப கட்சியின் அமைப்பாளர் என்ற ரீதியில் எனக்கூடாகவும்  இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோருக்கூடாகவும்  நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

02.மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

மாகாண சபைத்தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடவுள்ளேன். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒருவரை தமிழராக நியமித்ததும் மகிந்தராஜபக்ஷ  அரசாங்கம்தான். ஆகவே, மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கான ஆசனங்கள் கிடைக்க வேண்டும். தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க சந்தர்ப்பத்தை சரியாக மக்கள் பயன்படுத்த வேண்டும். இதற்காக நாம்
முழு மனதுடன் செயற்படுவோம்.
தமிழ் மக்களுக்காகவே மாகாணசபை முறைமை
வடக்கு-கிழக்கில் உருவாக்கப்பட்டது. தமிழர் ஒருவரை  முதலமைச்சராக்க இந்த அரசு பின்னிக்காது. நிச்சயம் தமிழர் முதலமைச்சராவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொதுஜன பெரமுன கட்சியும் அதில் உறுதியாக உள்ளது.

03.சிறுபான்மை மக்களை இந்த அரசு புறக்கணித்து நடக்கிறதா?

இந்த அரசாங்கமும்  ஜனாதிபதியும்  சிங்கள மக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்டாலும், அரசு தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளையும்  வேலைவாய்ப்புக்களையும்  உரிய முறையில் பகர்ந்தளிக்கின்றது. பக்கச்சார்பு என்று கூறிவிடமுடியாது. அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஊடாகவும் மாவட்ட அபிவிருத்திகள், மக்கள் தேவைகள்  அனைத்தும் அவ்வாறே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் ஐந்து அரச பிரதிநிதிகள் இருந்தால், ஐவருக்கூடாகவும் அபிவிருத்தி நடக்கும். மூவர் இருந்தால் மூவருக்கூடாக நடக்கும். எனவே, இவ்வாறான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் மக்கள் கைகளிலேயே உள்ளன.

04.இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுடன்  இணைந்து செயல்படுகின்றீர்களா ?

நாங்கள் ஒற்றுமையாகதான் செயற்படுகின்றோம்.  வெளிப்பார்வைக்கு சில விடயங்கள் விரிசல்களாக தெரியலாம். கடந்த காலத்தில் த.தே.கூட்டமைப்புடன் இருந்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்து இன்று அமைச்சராகவும் உள்ளார். இந்த கட்சியை மட்டக்களப்பில் வளர்த்ததில் இணைப்பாளர் என்ற ரீதியில் எனது பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பது வெளிப்படையான விடயம். அந்த வகையில் நான்  முடிந்த வேலைத்திட்டங்களை மட்டக்களப்புக்கு கொண்டுவந்து செயற்படுத்துகின்றேன். அமைச்சர் அவர்களும் மற்றும் அபிவிருத்தி குழு தலைவர் உட்பட அனைவருமே வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள்;. மட்டக்களப்பில் மூன்று தொகுதிகள் உள்ளன.மூன்று தொகுதிகளிலும் மக்களுக்கான சேவைகளையும்  அபிவிருத்திகளையும் ஒன்றிணைந்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொருவராக செயற்படுத்துகின்றோம்.

05.கிழக்கில் தமிழ்,முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நிர்வாக சிக்கல்கள் தலைதூக்கி உள்ளன. இதற்கு எப்படி தீர்வுகளை காண முடியும்?

  யுத்தத்தால்  தமிழ் மக்கள் பின்நோக்கியதால் தடைப்பட்டிருந்தன. உதாரணமாக, மட்டக்ளப்பில் 75 வீதம் தமிழர்கள் இருந்தும் 25 வீதமானவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்து அதிகாரங்களைப்பெற்று, அவர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தமை உண்மை . தேசியம் பேசியும் தேசியக் கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகள் பிரிந்து தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்று பிரசாரம் செய்யப்பட்டிருந்ததால்   பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்தது. ஆனால், இந்த அரசாங்கத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டை ஆளும்  தேசியக் கட்சியில் தமிழ் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  இன்று கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி அரசுடன் இணைந்து எமது மக்களின் தேவைகளையும்  அபிவிருத்திகளையும் செய்ய வேண்டும். பின்னடைவுகளில் இருந்து முன்னேற வேண்டும். அதுதான் எனது விருப்பம். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் அரசாங்க தரப்பைச் சேர்ந்த இருவரை வெற்றி பெற வைத்துள்ளார்கள். மட்டக்களப்பில் தமிழர்கள் 75 வீதம் உள்ளனர்.ஆகவே, தமிழரின் பிரதிநிதித்துவம், தமிழரின் அபிவிருத்திகளை இங்கு வாழும் 23 வீதம் உள்ளவர்கள் எடுத்துச்செல்ல நாம் அனுமதிக்க முடியாது.

06.கொவிட் ஒழிப்பு செயல் திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது?

கொவிட் உலகலாவிய ரீதியில் பெரும் சவாலாகவுள்து. வளர்ந்த செல்வந்த நாடுகளே செய்வதறியாது உள்ளன. இலங்கை வளர்ந்து வரும் நாடு. இந்த நிலையில், ஜனாதிபதியின் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை குறைத்து மதிப்பிட முடியாது.தடுப்பூசி செலுத்துவதும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சரும் எமது கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான   நாமல் ராஜபக்ஷ வடக்கு, கிழக்கில் தடுப்பூசி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்துகின்றார்.
நிலைமைகளை கருத்தில் கொண்டு கொவிட் தொற்றில் இருந்து நாமும் நாடும் மீண்டெழ, ஒவ்வொரு மக்களும் அரசாங்கத்தின்  கொவிட் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி அரசுக்கும் சுகாதார துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

07.அமைச்சர் பசில் பதவியேற்றதனால்  தமிழருக்கு சாதகமான நிலை இருக்கிறதா ?

அமைச்சர் பசில் ராஜபக்ஷ  வினைத்திறனான செயற்பாட்டாளர். அவரின் வருகை தமிழ் மக்களுக்கு பயனுள்ளது. அவர் கட்சியை ஸ்தாபிக்கும்போதே சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்தும் கொள்கை களை வகுத்துள்ளார். பசில் ராஜபக்ஷ அவர்கள் வடக்கு,கிழக்கு தொடர்பாக நன்கு அறிந்த ஒருவர். மட்டக்களப்பு தொடர்பாகவும் நன்கு அறிந்தவர். அவரின் வருகை மட்டக்களப்புக்கு நன்மையே.

08. கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஏன் இன்னும் தீர்வு காண முயலவில்லை ?

இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் எல்லை நிர்ணய வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் கோரிக்கை  என்பது  மக்களுக்கு அரச நிருவாக சேவையை வினைத்திறனாக்கும் விடயமே. இதனை அரசியல் மயமாக்கியதாலேயே  இழுபறியாக இருந்து வந்துள்ளது. 29 பிரதேச செயலகங்களில் 28 தரமுயர்த்தப்பட்டும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு மட்டும் தீர்வில்லாமல் காலம் கடத்தப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக்கொடுத்திருந்தும் தீர்ந்தபாடில்லை. அரசியல் மயமாகியதே எல்லாவற்றுக்கும் காரணம். மஹிந்த ராஜபக்ஷ,பசில்ராஜபக்ஷ  வாக்குறுதியளித்தால் அதனை நிச்சயம் நிறைவேற்றுவார்கள். புதிய பிரதேச செயலகங்கள்  உருவாக்கும் வேலைகள் இடம்பெறுகின்றன. அதன்போது, கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் அதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டு தரமுயர்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பல நிருவாக வேலைகள் தாமதமாக உலகளாவிய ரீதியில் நிகழ்கின்றமை யாவரும் அறிந்ததே. இலங்கையும்  அதற்கு விதிவிலக்கல்ல. யாருக்கும் பாதிப்பற்ற ரீதியில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவார்கள் என  நான் முழுமையாக நம்புகின்றேன்.

09. எதிர்ப்பு அரசியலை தொடர்ந்தும் முன்னெடுப்பது தமிழருக்கு சாதகமா? பாதகமா?

த.தே.கூட்டமைப்பு முரண்பாட்டு அரசியலை செய்தால்தான் அவர்களால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியும். செயற்பாட்டு அரசியல் செய்து, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் அவர்களின் அரசியல் முடிந்துவிடும். உதாரணமாக,பட்டிருப்பு தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை பார்த்தால் அவர் இங்கு உள்ள மக்களின் அடிப்படை பிரச்சி னைகளைத்  தீர்ப்பதற்கு பதிலாக, வெளிநாட்டில் உள்ள சிலரின் கருத்துக்களுக்கு ஏற்ப,அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே கருத்துகளை மட்டும் வெளிப்படுத்தி வருகின்றார்.  இவ்வளவு பெரிய யுத்தம் நடந்து ஓய்ந்து இவ்வளவு காலத்துக்கு, இவர்கள் சொல்வது போன்று,வெளிநாடுகள்  மத்தியஸ்தம் செய்து என்ன தீர்வை வழங்கியுள்ளன? அவைகள்  எல்லாம் வெறும் கண்துடைப்பு. அரசாங்கம்தான் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்.

Leave a Reply