இலங்கை பெண்களுக்கு கிடைத்த கௌரவம்! குழுவின் தலைவர் பெருமிதம் SamugamMedia

ஐசிசி கிரிக்கெட்டின் உத்தியோகப்பூர்வ குழுவிற்கு உயர்த்தப்பட்ட நான்கு இலங்கை பெண் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வனேசா டி சில்வா, மிச்செல் பெரேரா, டெடுனு டி சில்வா ஆகிய மூவரும் இலங்கைக்காக விளையாடியுள்ளனர். 

மேலும், நிமாலி பெரேரா இலங்கை ”ஏ” அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன் விளையாடினார்.

இவர்களில் வனேசா டி சில்வா ஐசிசி போட்டி நடுவர்களின் சர்வதேச குழுவின் உறுப்பினர் ஆவார். 

இவர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த மகளிர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் நடுவராக பணியாற்றினார் மற்றும் இறுதிப் போட்டியின் நடுவராக பெருமையை பெற்றார்.

அதேபோல் மிச்செல் பெரேரா, ஐசிசி கிரிக்கெட்டில் எதிர்கால தலைவர்கள் திட்டத்தின் இரண்டாவது குழு உறுப்பினராகவும், ஐசிசி போட்டி நடுவர்களின் சர்வதேச குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

ஐசிசி மேம்பாட்டு நடுவர்களின் சர்வதேச குழுவின் உறுப்பினராக டெடுனு டி சில்வா இருக்கிறார். மேலும் நிமாலி பெரேரா ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையில் நடுவராக பணியாற்றினார்.

இவர்கள் நான்கு பேருக்கும் பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்கியதை கௌரவிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் சிறப்புப் பலகை வழங்கப்பட்டது.

முன்னதாக இவர்கள் அனைவரும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தால், ஐசிசி போட்டியின் உத்தியோகபூர்வ குழுவிற்கு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழுவின் தலைவர் கூறுகையில், 

‘அவர்களின் சாதனையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனெனில், இது இலங்கை மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் பெண்கள் கிரிக்கெட்டில் ஈடுபடுவதற்கான பாதை வேறுபட்டது என்பதைக் காட்டுகிறது. அங்கு அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது முதல் சர்வதேச விளையாட்டுகளில் நடுவராகவும் இன்னும் பலவற்றை செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.    

Leave a Reply