மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் அது நாட்டிற்கு ஆபத்தாக முடியும் என்றும் எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பார்த்துக்கொண்டிருப்பதைவிடவும் நாட்டுக்காக சேவை செய்யக்கூடிய நேரமே இது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனை உணர்ந்தே பொது இணக்கப்பாட்டுடன் நிதி பற்றிய குழுவின் தலைமைப்பதவியை ஏற்க தீர்மானித்திருந்ததாக குறிப்பிட்ட மயந்த திஸாநாயக்க ஹர்ச டி சில்வாவுக்கு தலைமைப்பதவி கிடைக்காது என்பது ஏற்கனவே தனக்கு தெரிந்திருந்ததாக சுட்டிக்காட்டினார்.
அதனால் தான் பதவியை ஏற்றிருந்தாகவும் இன்று பதவி விலகிவிட்டதாகவும் இதனால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் தலைவராக செயற்படும் நிலை உருவாகியுள்ளதாக மயந்த திஸாநாயக்க ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.
தனக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை என்றும் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்பதே தனது கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தப்பிதவறியேனும் ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து என தெரிவித்துள்ள மயந்த திஸாநாயக்க, எனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் என தாம் கோருவதாக குறிப்பிட்டிருந்தார்.