யாழில் நீங்களும் புண்ணியம் செய்வதற்கான ஒரு வாய்ப்பு!SamugamMedia

எழுத்தாளர் நிலாந்தன் அவர்கள் மிகச் சமீபத்தில் மஹிந்த கொல்லாத நாய்கள் என்ற தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் யோகர் சுவாமிகள் தனது சீடர்களுக்கு, “பெண் நாய்க்குட்டிகளை தெருக்களில் அனாதைகளாக விடுவது ஒரு பாவம் அதன் கர்ம வினையை யாழ்ப்பாணம் ஒருநாள் அனுபவிக்கும் யாழ்ப்பாணத்தவர்களும் ஒருநாள் தெருவில் வந்து நிற்கவேண்டி இருக்கும்” என்று சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். பெண் நாய்க்குட்டிகள் என்றால் தெருவில் கொண்டுபோய்விடும் பழக்கம் ஏதோவொரு வகையில் நிறுத்தப்படவேண்டும். சுலபமான வழி கருத்தடை செய்து வளர்ப்பதுதான் என பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,
கடந்த தைப்பொங்கலின்போது வெடிச்சத்தத்தினால் மிரண்ட பெண் நாய் ஒன்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது. நாங்கள் கமலி என்று பெயர் சூட்டினோம். இரண்டு வாரங்களின் பின் ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது.
ஒரு ஆண் குட்டியும் ஐந்து பெண் குட்டிகளும் யாவும் அழகானவை. இக் குட்டிகளை வளர்க்க விரும்புபவர்கள், குறிப்பாக கூண்டுகளில் அடைக்காமல், சங்கிலிகளில் பிணைக்காமல் வளர்க்க விரும்புபவர்கள் எங்களுடன் தொடர்புகொண்டு (0777969644) குட்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தாய்க்கு விரைவில் கருத்தடைச் சிகிச்சை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். மூன்று வாரங்களின் முன்னரும் இவ்வாறு தெருவோர நாய் ஒன்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்திருந்தோம். அதன் குட்டிகளைப் பெற்றுச்சென்றவர்கள் குட்டிகளை நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். இந்தப் பராமரிப்பும் ஒரு புண்ணியச் செயல்தான்.
ஏனெனில் காட்டிலிருந்து வேட்டை மனிதன் நாட்டுக்குள் நுழைந்தபோது அவனை நம்பி முதன் முதலில் அவனுடன் வந்தது இந்த நாய்கள்தான். அவற்றுக்குப் பின்னர்தான் மற்றைய வளர்ப்புப் பிராணிகள் எல்லாம். மனிதன் எத்தனையோ பிராணிகளை வளர்த்தாலும் மனிதனுக்கு நன்றி காட்டுவதில், அவன் அன்பு செலுத்துவதில் நாய்களைவிட வேறு எந்தப் பிராணியும் உலகில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply