கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயமும், தமிழ் அரசியல் தரப்பின் இயலாமையும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயமும், தமிழ் அரசியல் தரப்பின் இயலாமையும்!

-கேதீஸ் புவிநேசராசா-
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்கள் அரச நிருவாக சேவையை வினைத்திறனாக பெற்றுக்கொள்வது கடந்த முப்பது வருடங்களாக தடுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதச செயலகத்துக்கான காணி, நிதி அதிகாரங்கள் வழங்கப்படுவதன் நியாயத்தை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டு வழங்குவதற்கு தயாராகின்றபோதெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி தடுத்து வரும் நிலைமை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இது தமிழ் அரசியல் தரப்பின் இயலாமையா? கவனயீனமா? அல்லது ஏதாவது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கள்ள இவர்கள் இயங்குகின்றார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளன.

மக்கள் அரச சேவையை சிறந்தமுறையில் பெறும்வகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களையும் பிடுங்கும் சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
எந்த அரசு வந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளால் நியாயத்துக்கு மாறாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் முட்டுக்கட்டை போடுகின்றார்கள் என்றால் ஏன் தமிழ் தலைவர்கள் கட்சி பேதங்களை மறந்து இதற்கு தீர்வை பெற முடியாதுள்ளது?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக மாற்றுமாறு ஒரு அறிவித்தல் அண்மையில் வந்திருந்தன. இந்த பின்னோக்கிய தீர்மானத்துக்கு பின்னால், முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொடர் சதி முயற்சி இருந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக, அமைச்சர் சமல் ராஜபக்சவை தமிழ் அரசியல் தரப்புக்கள் சந்தித்து விளக்கியபோது, அந்த அறிவித்தல் நிறுத்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்டு காணப்படும் அரச காணிகள் மற்றும் சிறு குளங்கள் இஸ்லாமிய தனி நபர்களால் அத்துமீறி மண் நிரப்படுவதும், போலியான ஆவணங்கள் தயாரித்து உரிமைகோரும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில், கல்முனை-01 சி கிராம சேவகர் பிரிவில் இவ்வாறான சம்வம் இடம்பெற்றபோது, இதனை தடுக்க நடவடிக்கை எடுத்த கிராம சேவை உத்தியோகத்தர் அச்சுறுத்தப்பட்டிருந்தார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், காணிப்பிரிவால் கலந்துரையாடலொன்று ஒழுங்கு செய்யப்பட்போது, அதனை நிறுத்துமாறு அறிவித்தல் வந்துள்ளமை பல கேள்விகளை உருவாக்குகின்றது.

காணி அதிகாரங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்படாமல் தடுக்கப்படுவதற்கும் இவ்வாறான காணி அபகரிப்புக்கள் இடம்பெறுவதற்கும் தொடர்புகள் இருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை வழங்ககோரி கடந்த முப்பது வருடங்களாக ஜனநாயக ரீதியில் போராடிவரும் இம்மக்களின் கோரிக்கையானது இதுவரை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரங்கள் பறிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
இரண்டு அரசாங்கங்களிலும் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் இருந்தனர்.ஆனால், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனாலும், முஸ்லிம் தரப்பு, இருக்கும் அதிகாரங்களையும் பறிக்க முயல்கின்றார்கள்.
இதற்கு தமிழ் அரசியல் தரப்பிடம் என்ன பதில் உள்ளது?
கடந்த கால யுத்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய முஸ்லிம் அரசியல்வாதிகள், கல்முனையில் தமிழரின் இருப்பை சிதைத்துள்ளனர். அதற்கு பல உதாரணங்கள் வெளிப்படையாகவே உள்ளன.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் – கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை, துரைவந்தியமேடு ஆகிய ஏழு கிராமங்கள் உள்ளன,
இதில், 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக பௌதிக வளம், ஆளணிகளுடன் நிரந்தரமான கட்டிடத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்கிவருகின்றது. ஆனால், நிதி மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாமலும் அதற்கான அதிகாரிகள் (வர்த்தமானி அறிவித்தலின் மூலம்) நியமிக்கப்படாமலும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதால் இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு இருப்பதாக ஒரு பொய்யான விம்பத்தை உருவாக்கி சிலர் அரசியல் செய்து வருகின்றனர்.
கல்முனை மாநகருக்குட்பட்ட குடியிருப்புக்கள் முழுமையாக தமிழ் குடும்பங்களையும் சொற்பளவு சிங்கள குடும்பங்களையும் உள்ளடக்கியிருந்தன. தமிழருக்கு சொந்தமான காணியில் அரச கட்டிடங்கள் கட்டப்பட்டதுடன், கல்முனை நகரில் அமைந்திருந்த கிறவல் குழி என அடையாளப்படுத்தப்பட்ட அரச காணி, இலங்கையின் நடைமுறைக்கு அப்பால் பாகிஸ்தான் தலைநகரின் பெயரான இஸ்லாமபாத் என அழைக்ப்பட்டு தனி முஸ்லிம் குடியிருப்பு உருவாக்கப்பட்டது.

சுனாமியின் பின்னர் அங்கு கட்டப்பட்ட தொடர்மாடி குடியிருப்பும் தனியாக முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறாக பல அநியாயங்கள் கல்முனை தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.

 கடந்த நல்லாட்சியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்குதாரராக இருந்தும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தனர். மாறாக, பிரதமர் மஹிந்த தரப்புடன் உறவைப்பேணிய நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சுமார் முப்பதாயிரம் வாக்குகளை வாரி வழங்கினர். ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் மகிந்தராஜபக்ச தற்போதைய நிதி அமைச்சர் பசில்ராஜபக்ச ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்கள். ஆனால் , அதுவும் இதுவரை நடந்தபாடில்லை. 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை 29 உப பிரதேசங்களை தரமுயர்த்த அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தவிர, ஏனைய 28 உப பிரதேச செயலகங்களுக்கு மாத்திரம் காணி நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிருவாகப்பிழைக்கு பொறுப்பு வாய்ந்த மாவட்ட செயலக அதிகாரிகளும் தொடர்ச்சியாக உடந்தையாக இருந்து வருகின்றார்களா?

Leave a Reply