வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வருடாந்தம் நடத்திவருகின்ற ரன்தோலி வீதிப் பெரஹரா நிகழ்வில் சென்ற யானை மதம்பிடித்ததினால் சலசலப்பு நிலை ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டி தாதா மாளிகையின் இறுதி ரன்தோலிப் பெரஹரா வீதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பாரியாருடன் கலந்துகொண்டு திருவி ழாவைப் பார்வையிட்டார்.
இதனிடையே கண்டி பிரதான வீதியில்வலம் வந்துகொண்டிருந்த அலங்கரிக்கப்பட்ட யானைக் கூட்டங்களில் ஒன்று, திடீரென நடனக் கலைஞர்கள் இருக்கும் திசைநோக்கி வேகமாக வந்துள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் நடனக் கலைஞர்களும், புகைப்பட ஊடகவியலாளர்களும் உடனடியாக அங்கிருந்து ஓடிச் சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மதம் பிடித்த யானையை கட்டியிழுத்த காவலாளிகளும், பாகனும், யானையின் மதம்போக்க நடவடிக்கை எடுத்தனர்.
கொவிட் தொற்று காரணமாக கண்டி பெரஹரா திருவிழாவை கண்டுகளிக்க உள்நாட்டவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.
அவ்வாறு அனுமதி வழங்கியிருந்திருந்தால் நேற்று இரவு மிகப்பெரிய அனர்த்தமும் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.


