காதலனுடன் இணைந்து கணவனை, தலையணையால் அமுக்கி, மூச்சு திணற வைத்து கொலை செய்த மனைவியையும், அவரது காதலரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி – கிரிவெல்தலாவ பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும், குறித்த பெண்ணுக்கு அவரது கணவன் பாலியல் ரீதியான சித்திரவதைகளை புரிந்து வந்துள்ளார்.
அது தொடர்பில் தன்னுடன் பணியாற்றும் மேல் அதிகாரியுடன் மனம் விட்டு பேசியுள்ளார்.
அவருக்கு ஆறுதலாக மேலதிகாரி இருந்து வந்த நிலையில், நாளடைவில் அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
காதலுக்கு கணவன் இடையூறாக இருந்தமையால், கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
கடந்த 19 ஆம் திகதி கணவனை படுகொலை செய்யும் நோக்குடன் இரத்தினபுரி பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் இருவரும் ஒவ்வொரு தூக்க மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளனர்.
மனைவி, தூக்க மாத்திரைகளை இரவு பாலுடன் கலந்து கணவனுக்கு கொடுத்துள்ளார்.
அதனால் கணவன் அசந்து தூங்கியதும் காதலனுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, வீட்டுக்கு வந்த காதலன், தூங்கிக்கொண்டு இருந்த கணவனின் காலை அமுக்கி பிடிக்க, மனைவி கணவனின் முகத்தில் தலையணையால் அமுக்கியுள்ளார்.
அதனால் ஏற்பட்ட மூச்சு திணறலால் கணவன் உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து காதலன் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார்.
அதனை அடுத்து மறுநாள் வழமை போன்று மனைவி ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அயலவர்கள் வீட்டில் கணவன் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக தொலைபேசி ஊடாக அவருக்கு தெரிவித்த போது, கதறியழுதவாறு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு அயலவர்கள் கூடி நின்ற போது, கணவருக்கு கொரோனோ தொற்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அதனால் அயலவர்கள் அவ்விடத்திலிருந்து விலகி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தில் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் போது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், மூச்சு திணறலால் மரணம் சம்பவித்ததாக சட்ட வைத்திய அதிகாரியினால் அறிக்கையிடப்பட்டது.
அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளிலையே காதலனுடன் இணைந்து மனைவியே கணவனை கொலை செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


