அரசியலில் இருந்து விலகுவேன்- மணிவண்ணன் அதிரடி

யாழ். மாநகர சபையின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்கிறேன் என உறுதிப்படுத்தினால் அரசியலை விட்டு விலகுவேன் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர நுழைவாயில்களில் முதல்வரால் தன்னிச்சையாக விளம்பரப் பதாகைகள் அமைக்கப்படுவது தொடர்பிலும், அதற்கான நிதியில் ஊழல் செய்வது தொடர்பிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் “யாழ். மாநகராட்சி மன்றம் அன்புடன் வரவேற்கிறது” எனும் அறிவிப்பு பதாகைகளை நிறுவுவது தொடர்பிலான கருத்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஏற்படும் செலவுகளுக்காக கடந்த பெப்ரவரி மாதமளவில் விளம்பரதாரர்கள் பகிரங்கமாக கோரப்பட்டிருந்தனர்.

அதன்படி தற்போது ஒரு நிறுவனம் மாத்திரமே 2 பிரதான வீதிகளின் நுழைவாயில்களுக்கு, விளம்பரதாரர்களாக முன்வந்துள்ளது.

அனைத்து வீதிகளிலும் விளம்பர பதாகைகள் அமைப்பதன் மூலம் வருடாந்தம் 20 இலட்சம் ரூபா மாநகர சபைக்கு வருமானம் கிடைக்கும்.

இதை குழப்புவதன் நோக்கம் என்ன?

இவற்றின் மூலம் வரும் வருமானத்தை வைத்து நாங்கள் வீதிகளை புனரமைப்போம்.

மாநகர சபையை தூய்மைப்படுத்துவோம்.

இதை நீங்கள் தெரிந்தே குழப்பம் விளைவிக்கிறீர்கள்.

முதல்வர் இதில் ஊழல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

நான் ஊழல் செய்கிறேன் என நிரூபிக்கும் பட்சத்தில் நான் அரசியலை விட்டு விலகுவேன்.

இதில் நான் 2 ரூபா ஊழல் செய்வதாக நிரூபியுங்கள் நான் மாநகர சபைக்கு 4 ரூபா செலுத்துகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *