கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த நிகழ்நிலை நடன நிகழ்வு!

கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த நிகழ்நிலை நடன நிகழ்வு!
இலங்கையிலிருந்து முனைவர் ராகினியின் 67நடனக்கலைஞர்கள் பங்கேற்பு

(வி.ரி.சகாதேவராஜா)

உலகெங்கிலுமிருந்து விரிவரங்க நிகழ்நிலையில் 850 நடனக்கலைஞர்கள்; பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்வு கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவைச்சேர்ந்த கலைமாமணி மதுரை.ராமச்சந்திரன் முரளிதரனின் நெறியாள்கையின்கீழ் இந்நடன நிகழ்வு கடந்த ஒருமாதகாலமாக நடைபெற்றுவந்தது.
ஏலவே பல கின்னஸ்சாதனைகளை நிகழ்த்திய மதுரை.ராமச்சந்திரன் முரளிதரன் இறுதியாக நடாத்திய சாதனை இதுவாகும்.

கோவிட் நிதிக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் கொரோனா அசாதாரண காலகட்டத்தில் விரிவரங்க நிகழ்நிலை ஊடாக இந்தியாவைச் சேர்ந்த கலைமாமணி மதுரை.ராமச்சந்திரன் முரளிதரன் குரு அவர்களின் நெறியாள்கையின் கீழ் பல நாட்டிலுமிருந்து 850 கலைஞர்கள் கலந்து கொண்ட நடன நிகழ்வு நடாத்தப்பட்டது.

அது உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் பதியப் பட்டது..
இந்த உலக சாதனை நிகழ்வில் தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளரும் செயற்திட்ட தலைவருமான முனைவர் திருமதி.நிசாந்தராகினி திருக்குமரனின் ஒருங்கிணைத்தலின் கீழ் இலங்கையிலிருந்து 67 கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.
கிழக்கிலங்கையிருந்து மாத்திரம் 45 கலைஞர்கள் பங்குபற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவைச் சேர்ந்த மாணவி செல்வி. ஜெயகோபன் தக்சாளினி என்பவரும் பங்குபற்றி சாதனைச் சான்றிதழைப் பெற்றுக் காரை மண்ணிற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

எம்நாட்டின் சாதனைக் கலைஞர்களைப் பெருமையுடன் கல்வியியலாளர்கள் பாராட்டிமகிழ்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *