வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மீனவர்கள் சுருக்குவலை தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள் தொழில் ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக மீனைக் கூட விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும் இதனால் உடனடியாக கடற்றொழில் திணைக்களம், மற்றும் கடற்படை, நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியன கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதனை கட்டுப்படுத்த தவறுகின்ற பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வடமராட்சி வடக்கில் உள்ள 12 கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்க மண்டபத்தில் இடம்பெற்ற 12 மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோரால் கடற்படைக்கு ஒரு தொகை நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
தற்போது இந்திய இழுவை மடி படகுகள் வருகை 50 வீதமாக குறைந்துள்ளதாகவும், தற்போது இந்தியாவில் மீன் பிடி ஓயவுக் காலம் என்றும் இதனாலேயே இழுவை மடி படகுகளின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், குறித்த மீன் வளர்ச்சி ஓய்வுக்காலம் முடிந்த பின் இந்தியன் இழிவை படகுகள் வருகை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டிறவு சங்கங்களின் சமாசங்களிற்க்கு யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினரால் நியமன அடிப்படையில் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டமை ஒரு ஜனநாயக விரோதம் என்றம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மேலுமஹ தெரிவித்தனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்ற வேளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் போராட்டம், செய்கிறார்களோ இல்லையோ நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத தொழில்கள் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.