நாட்டின் அரசியல் பாதையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டவர் மங்கள – ஜனாதிபதி

நாட்டின் அரசியல் பாதையில் முக்கிய மாற்றங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்டு மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றிய அரசியல்வாதியாக மங்கள சமரவீரவை குறிப்பிட முடியும் என ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் திடீர் மறைவு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கல் செய்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மங்கள சமரவீரவின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆழ்ந்த அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

தனது நண்பரும் சக ஊழியருமான மங்கள சமரவீரவின் அகால மரணத்தை கேட்டு மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது தேசத்தை நேசிக்கும் ஒரு சிறந்த தலைவரை இலங்கை இழந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் மங்கள சமரவீர அரசியலில் தம்முடன் மிகவும் நெருங்கி பழகியதாகவும் தமது அரசியல் வாழ்வுக்காக மகத்தான பங்களிப்புகளை வழங்கிய அரசியல்வாதியாகவும் அவரை குறிப்பிட முடியும் என பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

இதேநேரம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்களவின் அகால மரணம் தேசத்துக்கும், ஐ.தே.கவுக்கும், தனக்கும் பெரும் இழப்பாகும் என தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பிற்பகல் மங்களவிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், குணமடைந்தவுடன் அவரை சந்திக்க காத்திருப்பதாக அவரிடம் கூறியதாகவும் விக்ரமசிங்க கூறினார்.

எனினும் அது முடியவில்லை என்றும் நாட்டில் கட்டுக்கடங்காத தொற்றுநோய் இன்று (நேற்று) காலைக்குள் அவரது உயிரைக் கொன்றது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *