தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.
அத்தோடு இடைத்தரகர்களால் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கவும் அரசியல் அழுத்தமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட் டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பின் களஞ்சியசாலைகள் பறிமுதல் செய்யப்படும் அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினர் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சான்றளிக்கப்பட்ட விலையில் களஞ்சியசாலைகளை விற்கலாம்.
அத்தோடு பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக 4 மில்லியன் கிலோகிராம் நெல்லை சேமிப்பதற்காக இடைத்தரகர்கள் பயன்படுத்தும் ஆறு களஞ்சியசாலைகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை சீல் வைத்ததாக அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.





