காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா- பிரித்தானியா வலியுறுத்தல்!

காபூல் விமான நிலையத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் எனவும் மேற்குறித்த நாடுகள் கேட்டுக்கொண்டள்ளன.

அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாகச் சென்றுவிடுமாறு பிரித்தானியா கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாக பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் அதன் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் எந்தவகையான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது பற்றி அமெரிக்காவோ, பிரித்தானியாவே எந்தவிதமான கூடுதல் தகவலையும் கொடுக்கவில்லை.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆற்றிய உரையின்போது, ‘ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நேற்று (புதன்கிழமை) மட்டும் சுமார் 1,200பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய குடிமக்கள் மற்றும் தகுதியான ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு தங்களது அரசாங்கம் கடைசித் தருணம் வரை பயன்படுத்தும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்தார்.

தலிபான்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5,800 வீரர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த ஆயிரம் வீரர்களும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காபூல் நகரம் தலிபான்களின் வசமான பிறகு 10 நாட்;களில் சுமார் 82 ஆயிரம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *