வெனிசுவேலா வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!

மேற்கு வெனிசுவேலா மாநிலமான மெரிடாவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

மெரிடாவில் ஆளும் சோஸலிஸ்ட் கட்சி அதிகாரி நேற்று (புதன்கிழமை) அரசாங்க தொலைக்காட்சியில் இதனை உறுதிப்படுத்தினார். அத்துடன் மேலும் சில பகுதிகளில் தொலைபேசி சேவையை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடும் போது 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதனை உறுதிசெய்துள்ளதாகவும 17பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில ஆளுநர் ரமோன் குவேரா கூறினார்.

னநாயக நடவடிக்கை எதிர்க்கட்சியின் உறுப்பினர் குவேரா இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘இதை அரசியல் அல்லது சித்தாந்தமாக மாற்றாமல் இருக்க முயற்சிப்போம். அனைவரும் பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடுவோம்’ என கூறினார்.

மெரிடாவின் நகர மையத்தில் ஒரு மனிதாபிமான உதவி சேகரிப்பு நிலையத்தை ஏற்பாடு செய்ய குவேரா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அங்கு அவர்கள் தண்ணீர், உலர் உணவு பொருட்கள், ஆடை மற்றும் போர்வைகள் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். மேலும், குவேரா மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுகாதார ஊழியர்களை நியமித்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள், கார்கள் வீதிகளில் அடித்துச் செல்லப்படுவதையும், கட்டடங்கள் மற்றும் வணிகங்கள் சேற்றால் நிரப்பப்பட்டதையும், வீதிகளில் பாறாங்கற்களை சிதறடித்த மண் சரிவுகளையும் காட்டின.

சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் தவிர 87 நகராட்சிகளில் குறைந்தது 54,543பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சர் ரெமிஜியோ செபலோஸ் தெரிவித்தார்.

மெரிடா, டச்சிரா, ஜூலியா, அபுரே, அமேசானாஸ், பொலிவார், டெல்டா அமாகுரோ, மோனகாஸ் மற்றும் அரகுவா ஆகியவை அவசரகால நிலையில் இருக்கும் மாநிலங்கள் என்றும் அவர் கூறினார்.

மெரிடாவைச் சேர்ந்த 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளுக்கு மேலதிகமாக அவசர நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *