இரணைமடு சந்தியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தப்படுமா?

இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டிவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் அமைந்திருக்கக்கூடிய இரணைமடு சந்தியை மையமாக வைத்து இராணுவத்தினரால் பாரிய வளைவு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வளைவை இடைநிறுத்தி உரிய அனுமதியின் பிரகாரம் அதனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பிற்கு பல தடவை அறிவித்திருக்கின்றோம்.

இது தொடர்பாக சபைத் தீர்மானம் ஒன்றை பெற்று, சபையினுடைய 52வது பிரிவு அறிவுறுத்தலிற்கு அமைவாக அவற்றை இல்லாது செய்து விடுவதற்கும், அல்லது மேற்கொண்டு நீதிமன்றத்தை நாடுவதற்குமான தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக பொது மக்களால் பல்வுறு கருத்துக்கள் சபைக்க முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சி நகரம் இன்று திட்டம்மிட்டு அமைக்கப்படாத காரணத்தினாலே இந்த நகரத்திலே அமைக்கப்படுகின்ற வளைவுகள், மற்றும் சின்னங்கள் நகர ஆக்கத்திற்கு உதவக்கூடிய வகையிலே பொருத்தமானவகையில் அமைப்பதற்கான அனுமதிகள் துறைசார்ந்த திணைக்களங்களுடன் இணைந்ததாக வழங்கப்பட வேண்டும் என எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்ற வேளையில், இரணைமடு சந்தியிலே இராணுவத்தினரால் அனுமதி எதுவுமின்றி வளைவு கட்டப்படுகின்றமை தொடர்பில் பொது மக்களால் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பிலே நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுத்து, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நாங்கள் அந்த கட்டடத்திலே ஒட்டியுள்ளோம். இந்த நிலையில் எழுத்து மூலமாக நகர்த்தல்களை செய்து கொண்டிருந்த நிலையில் பயணத்தடை அறிவிக்கப்பட்ட காரணத்தினாலும், பிரதேச சபையில் ஏற்பட்ட எதிர்பாராத கொவிட் தொற்று காரணமாகவும், அலுவலக பணிகளை நாங்கள் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த இடைநிறுத்தப்பட்ட காலத்தினை பயன்படுத்தி இராணுவத்தினர் மேற்கொண்டு பணிகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்களால் மீண்டும் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பணிகளை உடன் நிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றி இராணுவத்தினர் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கம் உடையவர்களென கூறப்படும் நிலையில், இவ்வாறு மாவட்டத்தில் அரச நிர்வாக செயற்பாடுகளிற்கு மாறாக செயற்படுவதும், திருநகர் பகுதியிலே இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீரை நீர் வடிகான் வழியாக வெளியேற்றுவதால் துர்நாற்றம் வீசி வருவது தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்களும் சபையினால் விடுக்கப்பட்டுள்ள நிலைய்ல இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்க முடியாதவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கட்டுமானத்தினை பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கும் பிரதேச சபைக்க அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்த அவர் அவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் பொழுது இராணுவத்தினர் ஆயுத முனையில் நிறுத்த முற்பட்டால் பொலிஸாரின் உதவி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *