அச்சமானசூழலிலும் அசிங்கமான அரசியல் நடாத்தும் பினாமிகள்! காரைதீவு தவிசாளர்

அச்சமானசூழலிலும் அசிங்கமான அரசியல் நடாத்தும் பினாமிகள்!ஊடகச்சந்திப்பில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறில் கவலை.

(காரைதீவு நிருபர் )

கொடிய கொரோனா நிலவும் சமகால அச்சமான சூழ்நிலையிலும் அசிங்கமான அரசியலை ஒருசில அரசியல்பினாமிகள் அரங்கேற்றியுள்ளனர்.அது தொடர ஒருபோதும் நாம் அனுமதிக்கப்போவதில்லை.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையில் இடம்பெற்ற அமளிதுமளி தொடர்பாக ஊடகச்சந்திப்பை நடாத்திய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.

இச்சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.கூடவே உறுப்பினர்களான சின்னையா ஜெயராணி சதாசிவம் சசிகுமார் ஆகியோரும் உடனிருந்து கருத்துரைத்தனர்.

அங்கு தவிசாளர் மேலும் கூறுகையில்:
இன்றைய அவசரமான அச்சசூழலில் சுகாதாரவைத்தியஅதிகாரி மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரின் அனுமதியோடு குறுகியநேரத்தில் சபை அமர்வை நடாத்த திங்களன்று அனுமதிகிடைத்தது. ஊடகவியலாளர்களை அழைக்காமல் இவ் அமர்வு இடம்பெற்றது.
அங்கு வழமைபோல் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டபோது வழமைக்குமாறாக கூச்சலும் குழப்பமும் தலைதூக்கியது.

உறுப்பினர் பஸ்மீர் சபை ஒழுங்கு சட்டதிட்டங்களை மீறி அநாகரீகமான பேச்சுக்களை பேசி குழப்பம் விளைவித்தபோது அவரை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தேன். சபை ஊழியர் வெளியேற்றச் சென்றதும் பஸ்மீருக்கு ஆதரவாக சில முஸ்லிம்உறுப்பினர்களும் குமாரசிறி என்ற தமிழ்உறுப்பினரும் கூச்சலிட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல்போகவே சபை இறைமையை ஒழுங்கை கௌரவத்தை காப்பாற்றுமுகமாக சபையை சட்டத்திற்கமைவாக ஒத்திவைத்துவிட்டு நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன்.

முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த சபை தமிழ் ஊழியரான சுரேந்திரனின் மனைவிக்கும் மாவடிப்பள்ளியில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சார்பாக முஸ்லிம் சகோதரி ஒருவருக்கும் சபையில் வேலை வழங்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்மணிக்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது நானு ட்பட அனைத்து தமிழ்முஸ்லிம் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவளித்தார்கள். அடுத்ததாக சுரேந்திரனின் மனைவிக்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது உபதவிசாளர் ஜாகீர் இனத்துவேசத்தை கக்கியவாறு பலத்த எதிர்ப்பை தெரிவித்து ஆக்ரோசமாகப்பேசினார்.
அவருக்குஆதரவாக பஸ்மீர் ஜலீல் ஆகியோரும் எதிர்ப்புத் தெரிவித்து பேசினர். தமிழ்உறுப்பினர்களில் உறுப்பினர் குமாரசிறியைத் தவிர அனைவரும் அப்பெண்மணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எனது குரல்வளையை நசுக்குவதாக எண்ணி காரைதீவுமண்ணை விற்கத்தலைப்பட்டுள்ளனர். அற்பசொற்ப சலுகைக்கு சோரம்போயுள்ளனர். என்னைவீழ்த்தநினைப்பது இந்த விபுலமண்ணை வீழ்த்துவதற்கு ஒப்பானதாகும். எட்டப்பர்களும் கோடரிக்காம்புகளும் துரோகிகளும் இந்த மண்ணிலா? என்று நினைக்கின்றபோது வேதனையாகவிருக்கிறது.புத்திஜீவிகளும் மக்களுமே அதனைத் தீர்மானிக்கவேண்டும்.

ஊடகவியலாளர்கள் எவருமே அழைக்கப்பட்டிருக்காத அவ்வமர்வில் நான் தப்பிவெளியேறிஓடியதாக ஒரு இனவாத நிருபர் எழுதியுள்ளார்.இது நான் பிறந்த மண். காரைதீவு பெற்றெடுத்த தன்மானத்தமிழன். எந்தவேளையிலும் தப்பிஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி ஓடவும்மாட்டேன்.எமது வீரவரலாறு அதற்குச்சாட்சி. என்றார்.

சுயேச்சைக்குழு உறுப்பினர் சதாசிவம் சசிகுமார் கருத்துக்கூறுகையில்:

தவிசாளரோ நாங்களோ இந்த மண்ணில் பயந்தோடவேண்டிய தேவையில்லை. எமது வீரமிக்க சரித்திரம் அதைச்சொல்லும். காரைதீவு மக்களின் வாக்குகளைப்பெற்று அதே மக்களுக்கு துரோகம் செய்யும் ஈனப்பிறவிகளல்ல நாம்.வீடு பணம் போன்ற அற்பசலுகைக்காக மாற்றானிடம் மண்டியிடுபவன் தமிழனல்ல. தமிழனாய் இருக்கவும் முடியாது. முழு காரைதீவுக்கிராமமே எதிர்த்த மாவடிப்பள்ளி பண்டுவீதியைப்போட காரைதீவு மக்களின் வாக்குகளைப்பெற்ற இருபெரும் துரோகிகள் ஒப்பிமிட்டுள்ளதாக அறிகிறோம். அவர்களுக்கு காரைதீவுமக்கள் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுப்பார்கள் என்றார்.

த.தே.கூ.உறுப்பினர் சி.ஜெயராணி கூறுகையில்:

சபையிலுள்ள ஒரேயொரு வீரப்பெண்மணி நான். வாக்களித்த மக்களுக்காகவே நாம் சேவையாற்றுகிறேன்.சபையில் அநாகரீகமானகூச்சல் எழவே தவிசாளர் சபையின் கௌரவத்தைக் காப்பாற்றஎண்ணி ஒத்திவைத்துவிட்டு சிங்கம்போலெழுந்து அவரது அலுவலகத்திற்குச்சென்றார். அங்கு நானும் உறுப்பினர்களான ச.நேசராசா த.மோகனதாஸ் ச.சசிக்குமார் ஆகியோரும் சுமார் ஒருமணிநேரம் வரை இருந்துவிட்டே வீடு திரும்பினோம். நிலைமை இப்படியிருக்கையில் சபைக்குவராமல் தப்பியோடியதாக எழுதியிருக்கும் அந்த நிருபரை நாம் வன்மையாகக்கண்டிக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *