ஜனாதிபதியிடம் புதிய திட்டத்தை முன்வைத்த ரணில்

இலங்கையில் கொரோனா தொற்றின் உச்சகட்ட தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார பாதிப்பை ஈடுசெய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகோருமாறும் அரசாங்கத்திடம் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறித்து, ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் விசேட உரையொன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் போதுமானது கிடையாது என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

மங்கள சமரவீர கோவிட் தடுப்பூசிகளை அனுப்பிவைக்கும்படி சமந்தா பவருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளார். ராஜமகேந்திரன், கௌரி தவராசா உள்ளிட்ட பலரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நான் நன்கறிந்த 06 பேர் பலியாகியிருக்கின்றனர். தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 5000ஐ அண்மிக்கின்றது.

கடந்த 20 நாட்களில் 3000 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. இதுவரை 50 ஆயிரம் பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மிகவேமாக தொற்று பரவுகின்றது. அதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதால் தான் அவற்றை மேற்கொள்ள முடியும். அதன்படி 10 நாட்கள் பொதுமுடக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் தரப்பினரது பரிந்துரைகளுக்கமைய இந்த 10 நாட்கள் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த போதாது எனவும் மேலும் இரண்டு வாரங்கள் அவசியம் என்றும் வலியுறுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

அதற்கடுத்த பக்கத்தில் பொருளாதார ரீதியிலான பாதிப்பும் காணப்படுகின்றது. இந்நிலையில், பொருளாதாரத்தை கட்டியெழுப்பு வேண்டுமென்றால், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அவர்களது உதவி கோரப்பட வேண்டும்.

ஏற்கனவே 720 மில்லியன் டொலர்கள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தலுக்காக பெறப்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா அமைச்சரவைக்கு கோரிக்கையை முன்வைக்கின்றேன். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10 நாட்கள் முடக்கநிலையை சுகாதாரத் தரப்பினரது பரிந்துரைக்கமைய, தொடர்ந்து 02 வாரங்களுக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்-என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *