இராணுவத்தினரின் நடமாடும் கொரோனா தடுப்பூசி

கொரோனா அனர்த்த நிலைமையை முன்னிட்டு இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது இன்று அம்பாறை மாவட்டத்தில் முதற்கட்டமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(26) மற்றும் வெள்ளிக்கிழமை(27) ஆகிய தினங்களில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த வேலைத்திட்டமானது நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தலைமையில் ஆரம்பமானதுடன் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்தியத்திற்கு மேலும் வந்துள்ள 20ஆயிரம் தடுப்பூசிகள் அனைத்தும் பிராந்தியத்திலுள்ள 13 சுகாதாரப்பிரிவுகளிலும் விடுபட்ட 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் ஏற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கிணங்க இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று நிந்தவூர் பகுதிகளில் வீடு வீடாகச்சென்று இத்தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர். இந்நடவடிக்கையை கண்காணிப்பதற்காக 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரியும் கல்முனை பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோன், கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு வருகை தந்து பார்வையிட்டனர்.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமானது இரானுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டுக்கு வீடு வழங்கப்படவுள்ளதனால் இது வரையிலும் கொவிட் தடுப்பு மருந்து ஏற்றிக்கொள்ளாத 60 வயதிற்கு மேட்பட்டோர் அனைவரும் உடனடியாக தங்களின் விபரங்களை தமக்குரிய கிராம சேவகரிடம் வழங்குவதன்மூலம் இச்சேவையினை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தெரிவித்தார்.

இது தவிர நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ‘சுவ தாரணி’ ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் கலந்து கொண்டு பொதுமக்கள், அரச சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு இந்த ‘சுவ தாரணி’ நோய் எதிர்ப்பு சக்தி பானங்களை வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவிலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமானது இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீட்டுக்கு வீடு வழங்கப்பட்டது.

இதில் மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக்கான நடமாடும் தடுப்பூசிகள் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *