காபூலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்: அமெரிக்கா எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) அபே நுழைவாயில் வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில், 13 அமெரிக்க துருப்புக்கள், 28க்கும் மேற்பட்ட தலிபான்கள் என மொத்தமாக 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காபூல் நகர விமான நிலைய பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உளவு அமைப்புகள் எச்சரித்த 24 மணி நேரத்துக்குள்ளாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், ஒரு ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 30 வீரர்கள் இறந்ததிலிருந்து ஒரே ஒரு சம்பவத்தில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க படைகளில் இதுவே அதிகம் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து செய்வோம் எனவும் பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புகழாரம் சூட்டினார்.

இந்தநிலையில் இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க மத்திய கமாண்ட் படையின் தலைவர் ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி,
‘காபூல் விமானநிலையத்தில் இன்னும் தாக்குதல்கள் நடைபெறலாம். ரொக்கெட் லொஞ்சர்கள் மூலமும் கார் அல்லது வேறு வாகனங்களில் வெடிகுண்டை நிரப்பியும் தாக்குதல் நடத்தப்படலாம்.

நாங்கள் எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். ஜனாதிபதி ஜோ பைடன் பென்டகனுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் ஐஎஸ்.ஐஎஸ்-கே (கொராஷன்) தீவிரவாதிகளைத் தாக்க தகுந்த திட்டம் வகுக்குமாறு கூறியுள்ளார்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *