அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதே இன நல்லிணக்கத்தின் ஆரம்பம்- சபா குகதாஸ்

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாக்க இலங்கை ஐனாதிபதி கோட்டாபய தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற் கொள்ள ஓய்வு நிலை நீதிபதி அசோக டீ சில்வா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார்.

ஐனாதிபதி நாட்டின் மிக நெருக்கடியான நிலையில் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற முயற்சிப்பதற்கு போலியாக நடிப்பதாகவே தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் ஐனாதிபதி நியமிக்கும் எந்தக் குழுக்களையும் ஆணைக்குழுக்களையும் நம்பத் தயார் இல்லை. காரணம் கடந்த காலத்தில் ஆணைக்குழு அறிக்கைகள் யாவும் காலத்தைக் கடத்துவனவாகவும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை நீர்த்துப் போகச் செய்வதாக அமைந்ததையும் பாதிக்கப்பட்டவர்கள் மறக்கமாட்டார்கள். இது தமிழ் மக்களுக்கு மிகவும் கசப்பான உண்மை.

நாட்டில் இனங்களிடையே ஒரு சிறந்த நல்லெண்ண வெளிப்பாடு உருவாக ஐனாதிபதி கோட்டாபயாவால் முடியும் அதற்கான சர்வ அதிகாரம் அவரது கையில் உள்ளது. அதனைப் பயன்படுத்தி முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதாகி தண்டனைக் காலத்தைக் கடந்து சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட மக்களும் கைதிகளும் தொடர்ச்சியாக கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர் இக் கோரிக்கையை தமிழ் அரசியல் கட்சிகளும் கோரிவருகின்றனர். இதனை சர்வதேச நாடுகளும் அழுத்தங்களை கொடுத்து இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வழி ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பின் பின்பே பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தம் தொடர்பான உண்மையை ஒரளவு நம்ப முடியும் ஆனால் இந்த நாட்டின் நிலையான இன நல்லிணக்கத்திற்கு ஒரே வழி பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதே ஆகும் இதுவே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தற்காலிக வழிகளை போலியாக கையாள்வதை அரசாங்கம் நிறுத்தி நிலையான தீர்வுக்கு இதய சுத்தியுடன் இன நல்லிணக்கத்தின் ஆரம்ப முயற்சிகளை நிறைவேற்றுவதே நாட்டிற்கும் மக்களிற்கும் ஆரோக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *