காபூல் விமான நிலைய தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்வு!

காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 170ஆக அதிகரித்துள்ளது.

மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 அமெரிக்க கடற்படையினர், இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு கடற்படை மருத்துவர் அடங்குவதாக அமெரிக்கா தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் தங்களது தரப்பில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) அபே நுழைவாயில் வெளியே அமெரிக்க துருப்புக்கள் பெரும் கூட்டம் நுழைவதைச் சரிபார்த்துக்கொண்டிருந்த போது இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐ.எஸ்-கே என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசு கொரோசன் என்கிற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஆனாலும், ஐ.எஸ். குழுவினர் தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சுறுத்தல்களுக்கும் இடையிலும், இறுதி நொடி வரை காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

இரு வாரங்களுக்கு முன் தொடங்கிய மக்களை வெளியேற்றும் பணியில் இதுவரை 1,11,000 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *