அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து தகவல் வௌியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது சாரதியிடம் இருந்து தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தான் மிகவும் தரமான முகக்கவசம் அணிவதாகவும் ஆனால் வாகனத்தில் பயணிக்கும் போது முகக் கவசத்தை அகற்றியதாகவும் அதனால் வாகனம் செலுத்திய சாரதியிடம் இருந்து தனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக நம்புவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
அதனால் முகக்கவசத்தை ஒருபோதும் அகற்ற வேண்டாம் என அவர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பந்துல குணவர்த்தன 20ம் திகதிக்குப் பின் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் பந்துல குணவர்த்தன பங்கேற்றதுடன் அதில் ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





