தமிழருக்கு என்ன நடந்தாலும் சர்வதேசமும் கேட்காது அயல்நாடான இந்தியாவும் கேட்காது. படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று பாதிக்கப்பட்ட தரப்புக்களின் நீதி உறுதிப்படுத்தபடவேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
செஞ்சோலை படுகொலை நினைவேந்தலினை அனுஷ்டித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இன்று செஞ்சோலை படுகொலை நினைவுநாள். இவ்வளவு மாணவர்களையும் ஒரே நேரத்தில் கிபிர் விமானத்தினால் குண்டுகள் போட்டு 61பேரை கொண்டார்கள். இதில் மாணவர்கள் மாத்திரம் 54 பேர். இந்த பிஞ்சு குழந்தைகள் அரச இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை இந்த கொலை பற்றி சர்வதேசமோ அல்லது உள்ளூரிலோ இது பற்றி எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. இதற்கு ஒரு நீதியும் இல்லை, தீர்ப்பும் இல்லை. இது மாத்திரமல்ல இது போல் நவாலியிலும் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலைமை தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த கொலைகள் இனப்படுகொலைக்கு மிக ஆதாரமான ஒரு விடயமாக இருந்தாலும் அதை இனப்படுகொலை இல்லை என்று நிரூபிக்க முற்படுகின்றார்கள்.
இந்த கொலை சம்மந்தமாக இனியாவது ஒரு சர்வதேச நீதி கிடைக்கபெறவேண்டும். ஆனால் எதுவும் நடந்த மாதிரி இல்லை. இங்கே எத்தனையோ ஆண்டுகள் போய் விட்டன. மீண்டும் விசாரணை வரும் என்றவாறு பேசப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் எங்களை பொறுத்த அளவில் இந்த நாட்டில் சிங்கள பெரும்பான்மையினருடன் எதுவும் செய்ய முடியாது. இதை துல்லியமாக கணித்தவர் வேலுப்பிள்ளை அவர்களின் மகன். ஆனால் இன்று மீண்டும் இந்த நிலைமைக்கு கொண்டு வர எத்தனிக்கின்றார்கள்.
அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் மீண்டும் இந்த நிலையை தோற்றுவிக்காது என ஜனாதிபதி உத்தரவாதம் கொடுக்க முடியாது. எதுவும் நடக்கலாம். ஜனாதிபதியால் கூட ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திணறுகின்றார்.
இங்கே எமது பத்திரிகை ஸ்தாபனத்தில் உள்ளே நுழைந்து கூட சுட்டார்கள் அதற்கும் ஒரு நீதியும் இல்லை. இருவர் இறந்தார்கள், 16 பேர் காயமைடைந்தார்கள். இங்கு தமிழனுக்கு எது நடந்தாலும் சர்வதேச சமூகமும் கேட்கின்றார்கள் இல்லை, அண்மை நாடான இந்தியாவும் கேட்கின்றது இல்லை, இலங்கை அரசாங்கமும் அதை செயற்படுத்த தயாராக இல்லை. இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஓடி கொண்டு இருக்கின்றது இவர்களுடைய ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்பதை தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.