குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள்மற்றும் தேரர்கள் ஐந்து பேருந்துகளில் குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வேளையிலே தமிழ் மக்கள் பொங்கல் நிகழ்வுக்காக இன்னும் சற்று நேரத்திலே குறித்த பகுதிக்கு வருகை தரவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேலை புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.