மட்டக்களப்பில் பரபரப்பு…! துப்பாக்கி முனையில் சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல்…!samugammedia

கிரானில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு வந்த ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்கள் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துச்சென்றதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று(03) மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று இரவு 11.30மணியளவில் எங்களது வீட்டுக்கு முன்பாக நின்று சத்தமிட்டு அழைத்தார்கள்.நான் வெளியில் சென்றபோது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுபேர் வந்திருந்தார்கள்.கலர் மற்றும் கறுப்பு ஆடைகள் அணிந்திருந்தார்கள்.வாய்கள் கட்டப்பட்டு தலைக் கவசத்தினால் முகங்களை மறைத்திருந்ததுடன் அவர்களிடம் ரி 56 துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் இலக்க தகடுகள் மறைக்கப்பட்டிருந்தது.என்னைப் பார்த்து தேவையற்ற வேலைகளை செய்வதாகவும் அவற்றினை நிறுத்தவேண்டும் என்று கோரினார்கள்.

தீவுச்சேனை என்னும் மறைக்கப்பட்டிருந்த விடயம்.அதனை கதைப்பதற்கோ அதனை மறுபடியும் தோண்டியெடுப்பதற்கோ நீங்கள் எத்தனிக்க கூடாது. அதனை செய்திருக்க கூடாது.இன்றைய நாளில் உங்களை கொல்லவே வந்தோம்.ஆனால் முதலாவதாக உங்களை எச்சரிக்கின்றோம் என்றார்கள்.

அதில் கறுப்பு உடையணிந்திருந்த நால்வரும் எமது பேச்சு வழக்கு தமிழை நன்றாக கதைத்தார்கள்.பின்னாலிருந்த இருவரும் அவர்களுக்குள் சிங்களத்தில் கதைத்துக் கொண்டார்கள்.மட்டக்களப்பில் நீங்கள்தான் பல தேவையற்ற விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

உங்களைப் போன்றவர்களுக்காக எமது ஆயுதங்களை பழையபடி தூசி தட்டவேண்டிய நிலைமை மறுபடியும் வந்திருக்கின்றது என்று என்னை அச்சுறுத்தினார்கள்.

மீண்டுமொரு தடவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நிச்சயமாக உங்களை போடுவோம் என்று கூறினார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் நிச்சயமாக அரசுடன் இயங்குகின்ற அரச புலனாய்வும் அரசுடன் உள்ள ஒட்டுக்குழுக்களையும் தவிர இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லவிரும்புகின்றேன்.

கடந்த காலத்தில் நடந்த இனப்படுகொலைகள்,ஆட்கடத்தல்கள் அனைத்துவிதமான அநீதியான செயற்பாடுகளுக்கும் நடைபெறாத காரணம்.

நீதியான விசாரணைகள் நடைபெற்று இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன்பாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படாமலிருந்தமைதான் அவர்கள் சுதந்திரமாக மீண்டும் ஆயுத கலாசாரங்களை கடத்தல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.இதற்கு சர்வதேசமும் பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply