கிண்ணியாவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பொதுமக்கள் பங்கேற்பு..!samugammedia

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (13) கிண்ணியாவில் இடம் பெற்றது.

இவ்வார்ப்பாட்டமானது திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் பழைய ஆஸ்பத்திரி சந்தியில் ஆரம்பித்து கிண்ணியா பாலம் வரை போராட்டம் இடம் பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தை கிண்ணியா சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளிவாசல் சம்மேளனங்களின் உறுப்பினர்கள், சூறா சபை உறுப்பினர்கள், பலஸ்தீனத்துக்கு ஆதரவான பொது மக்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலஸ்தீனத்துக்கு எதிரான யுத்தத்தை நிறுத்து, பாடசாலை வைத்தியசாலைகள் அழிப்பதை நிறுத்து, இனப்படுகொலையை நிறுத்து, குழந்தைகள் பெண்களை அழிப்பதை நிறுத்து முதலான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் ஆபிரிக்காவுக்கு நன்றி தெரிவித்தும் அமெரிக்க பிரித்தானியாவை கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தனர்.

இது ஒரு மதம் சார்பானதோ, இனம் சார்பானதோ, நிலம் சம்மந்தமான போராட்டமோ அல்ல இது மனித நேயம் சம்மந்தமான போராட்டமே. ஜனநாயக போராட்டத்துக்கும் நீதிக்கான போராட்டத்துக்கும்  ஆதரவளிப்பதோடு சமாதானத்தை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் குழந்தைகளை கொல்கிறார்கள். வைத்தியசாலைகளை அழிக்கிறார்கள். சியோனிசம் ஒழிக்கப்பட வேண்டும். யுத்தம்  நிறுத்தப்பட வேண்டும். பலஸ்தீன மக்களின் மீதான இன அழிப்பு நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கையில் இருந்து சென்ற கப்பலும் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *