மதுபோதையில் பொலிஸார் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் படுகாயம்..! மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

 

மன்னார் – இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் இருவர்  மது போதையில் கடுமையாக  தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 ஆம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சி.நகுலேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே பாதிக்கப்பட்டுள்ளார்.  

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு நான் வீட்டில் இருந்த போது இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து  மது விற்பனை நிலையத்திற்கு வருமாறும்,

பொங்கலுக்கு நீதான் பார்ட்டி வைக்க வேண்டும் என கூறி வரும் போது 5 ஆயிரம் ரூபாய் கொண்டு வா எனவும் கூறினார்கள்.

நான் பணத்துடன் மதுபானசாலைக்கு சென்றேன். என்னிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று குறித்த போலீசார் மதுபானம் அருந்தினார்கள்.

மிகுதி 2 ஆயிரம் ரூபாவை என்னிடம் தந்து நீ இதை நீதிமன்றத்திற்கு கொண்டு போ. உனக்கு பழைய வழக்கு உள்ளது என  தெரிவித்தனர்.

எனக்கு எவ்வித வழக்கும் இல்லை என நான் குறித்த பொலிஸாருக்கு தெரிவித்தேன்.

உடனடியாக மதுபானசாலைக்கு முன் எனது இரண்டு கைக்கும் கை விலங்கை போட்டு கடுமையாக தாக்கினார்கள்.

மோட்டார் சைக்கிலில் ஏற்றியும் என்னை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.

கடுமையாக தாக்கியதினால் என்னை தாக்காதீர்கள், நான் சாகப்போகிறேன் என்று கூறினேன்.

நீ செத்துப் போ என கூறி என்னை தள்ளி விட்டார்கள். பொலிஸார்  தாக்கியதில் எனது வலது கால் உடைந்ததோடு, இடது காலிலும் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் என்னை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அங்கிருந்த இலுப்பைக்கடவை ஓ.ஐ.சி., இருக்கின்ற இரண்டு வாள்களையும் போட்டு இவனுக்கு வழக்கை பதிவு செய்யுங்கள்,

‘இல்லை என்றால் உங்களுக்கு கேஸ் ஆகும்’ என்றார்.

பின்னர் எனக்கு வழக்கு எழுதிய பின்னர் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் என்னை அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றினார்கள்.

நேற்றைய தினம் புதன்கிழமை (17) மன்னார் நீதிபதி வைத்தியசாலைக்கு வந்து என்னை பார்த்து விட்டு எதிர்வரும் 3 ஆம் மாதம் 28 ஆம் திகதிக்கு தவணையிட்டுச் சென்றுள்ளார்.

எனக்கு இப்போது தான் குழந்தை கிடைத்துள்ளது. எனது பிள்ளைக்கு வயிற்றில் ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தையும் எனது  பெற்றோர் சகோதரங்களையும் நான் தான் பார்க்க வேண்டும்.

தற்போது எவ்வித உதவியும் இன்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன்.

எனவே இலுப்பைக்கடவை பொலிஸாரின் குறித்த நடவடிக்கைக்கு எதிராக எனக்கு உரிய தீர்வு வேண்டும். என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் உறவுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *