சுமந்திரன் விடுத்த கோரிக்கை- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சாள்ஸ் நிர்மலநாதன் சம்மதம்..!

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.

அதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக  வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில்  தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த தெரிவுகள் யாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம்(4) மன்னார் வருகை தந்து  வேட்பாளர்களை இறுதி நிலைப்படுத்தியதாக தெரியவருகிறது.

எம்.ஏ.சுமந்திரன்  மன்னார் கட்சி அலுவலகம் வருகை தந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன்  இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தேர்தலுக்கான  செலவுகள் பற்றியும் ஆராயப்பட்டது.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட  சம்மதித்துள்ளார்.

அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்திலிருந்து  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், உட்பட முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், மன்னாரின் இளம் சட்டத்தரணி  செல்வராஜா டினேசன் ஆகிய மூவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தெரிய வருகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இத் தேர்தலில் இருந்து நான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *